தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அதிரடியான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், வரவிருக்கும் தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி எப்போதும் போல மக்களை மட்டுமே நம்பி தனித்து களம் காணும் என அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். அதிகாரம் மற்றும் பணத்தைச் சேர்த்து வைத்துக்கொண்டு, அதையே முதலீடாக வைத்துத் தேர்தலில் ஜெயிக்க நினைக்கும் “கேடுகெட்ட பணநாயகத்தை” வீழ்த்த வேண்டிய நேரம் இது என அவர் சாடியுள்ளார்.

​மாண்புமிக்க ஜனநாயகத்தை மலரச் செய்யவே தங்கள் கட்சி களத்தில் நிற்பதாகக் கூறியுள்ள சீமான், எப்போதும் போல தங்களால் இயன்ற நிதி உதவியைச் செய்து உங்கள் பிள்ளைகளின் கைகளை வலுப்படுத்த வேண்டும் என மக்களிடம் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார். எந்தக் கூட்டணியும் இன்றி, கொள்கையை மட்டுமே முன்னிறுத்தி தனித்துப் போட்டியிடும் சீமானின் இந்த அறிவிப்பு, தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.