கேரள மாநிலத்தில் கடந்த டிசம்பர் 9 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின் முடிவுகள் 13ஆம் தேதி வெளியானது. இதில், எதிர்க்கட்சியான காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) பெரும்பாலான உள்ளாட்சி அமைப்புகளில் வெற்றி பெற்றது.

ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி (LDF) பின்னடைவை சந்தித்த நிலையில், திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றிய பாஜக அரசியல் வட்டாரங்களில் கவனம் ஈர்த்தது. மேலும், மாநிலத்தின் பல பகுதிகளில் பாஜக சில உள்ளாட்சி அமைப்புகளில் வெற்றி பெற்றது.
இந்த நிலையில், திருச்சூர் மாவட்டம் மட்டத்தூரில் உள்ள பஞ்சாயத்தில் நடந்த சம்பவம் அரசியல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மட்டத்தூர் பஞ்சாயத்து தேர்தலில், இடதுசாரிகள் 10 இடங்களிலும், காங்கிரஸ் 8 இடங்களிலும், பாஜக 4 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தன. மேலும், 2 சுயேச்சை உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர்.

இன்று நடைபெற்ற மட்டத்தூர் பஞ்சாயத்து தலைவர் தேர்வு கூட்டத்தில், காங்கிரசைச் சேர்ந்த 8 உறுப்பினர்களும் திடீரென பாஜகவில் இணைந்தனர். இதனால் காங்கிரஸ் தலைமையகம் கடும் அதிர்ச்சியடைந்துள்ளது. பாஜகவில் இணைந்த முன்னாள் காங்கிரஸ் உறுப்பினர்கள், சுயேச்சை உறுப்பினர்களின் ஆதரவையும் பெற்றதன் மூலம், மட்டத்தூர் பஞ்சாயத்தின் நிர்வாகத்தை பாஜக கைப்பற்றியது. இதன் மூலம், நீண்ட காலமாக அங்கு நீடித்து வந்த இடதுசாரி ஆதிக்கம் முடிவுக்கு வந்ததாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த மாற்றங்களின் பின்னணியில், பாஜக ஆதரவு பெற்ற சுயேச்சை உறுப்பினர் டெசி ஜோஸ் கல்லரக்கல், மட்டத்தூர் பஞ்சாயத்துத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் ஊடகங்களிடம் பேசுகையில், “மட்டத்தூரில் நீண்ட காலமாக நிலவி வந்த இடதுசாரி ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வருவதே இந்த நடவடிக்கையின் நோக்கம்” என்று தெரிவித்தார்.
காங்கிரஸ் உறுப்பினர்கள் கூண்டோடு பாஜகவில் இணைந்த சம்பவம், கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.