தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கூறிய கருத்துக்களுக்குத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. விஜய்யின் பேச்சு ஆதாரமற்றது மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று கூறியுள்ள காங்கிரஸ் அமைப்புச் செயலாளர் ராம் மோகன், காங்கிரஸ் கட்சி ஒரு பாரம்பரியமிக்க இயக்கம் என்றும், அதை யாராலும் கட்டுப்படுத்த முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

விஜய்யின் கட்சி காங்கிரஸுடன் கூட்டணி வைக்கத் திரைமறைவில் முயற்சி செய்ததாகவும், ஆனால் அவருடைய கொள்கை என்னவென்றே புரியாததால் அந்த முயற்சிகள் முளையிலேயே நிராகரிக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி கடந்த 20 ஆண்டுகளாக வலுவாகச் செயல்பட்டு வருவதாகவும், த.வெ.க-வுடன் கூட்டணி வைக்க வாய்ப்பே இல்லை என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. காங்கிரஸில் ஆள்பிடிக்கும் முயற்சியில் விஜய் ஈடுபட்டதாகவும், ஆனால் ஒரு சிலரைத் தவிர வேறு யாரும் சிக்கவில்லை என்றும் காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

“உண்மையான காங்கிரஸ் விஜய்யுடன் இருக்கிறது” என்று கூறுவது அப்பட்டமான பொய் என்றும், இது தொண்டர்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் செயல் என்றும் கூறியுள்ள ராம் மோகன், தனது கருத்தைத் திரும்பப் பெற்று விஜய் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.