தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நாளை கடலூரில் மேற்கொள்ளவிருந்த பிரச்சாரம் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாளை புதுச்சேரியில் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுவதால், பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து காரணங்களுக்காக அந்த வழியாகச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதே இதற்கு முக்கியக் காரணம். இதனையடுத்து, கடலூர் பிரச்சாரம் வரும் 11-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

ஏற்கனவே நெல்லை மற்றும் தூத்துக்குடியில் உற்சாகமாகப் பிரச்சாரம் செய்த விஜய், மீண்டும் ஒருமுறை பயணத் திட்டத்தை மாற்றியது தொண்டர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ​சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், 234 தொகுதிகளிலும் விஜய் எப்படிப் பிரச்சாரம் செய்வார் என்ற கேள்வி தவெக நிர்வாகிகள் மத்தியிலேயே எழுந்துள்ளது.

பெரம்பூர், கொளத்தூர் எனச் சில இடங்களுக்கு மட்டுமே சென்ற விஜய், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல கூட்டங்களை திடீரென ரத்து செய்து வீட்டிற்குத் திரும்பியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. “தேர்தல் நெருங்கும் வேளையில் ஒரு நாளைக்கு 16 தொகுதிகளிலாவது பேசினால் தான் இலக்கை எட்ட முடியும்” என நிர்வாகிகள் கவலை தெரிவித்து வரும் நிலையில், விஜய்யின் இந்தத் தாமதமான நகர்வுகள் அரசியல் களத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.