இந்தியாவின் முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் (Flipkart), தற்பொழுது தனது வர்த்தகத்தை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் உணவு டெலிவரி துறைக்குள் அதிரடியாகக் காலடி எடுத்து வைக்கவுள்ளது. ஏற்கனவே ஆன்லைன் ஷாப்பிங் மற்றும் விரைவுப் பொருள் விநியோகச் சேவைகளில் கோலோச்சி வரும் இந்நிறுவனம், தற்போது மக்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்து வரும் உணவு டெலிவரி தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் புதிய சேவையைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளது.

இதன் மூலம் ஆன்லைன் உணவு விநியோகச் சந்தையில் ஏற்கனவே கொடி கட்டிப் பறக்கும் மற்ற முன்னணி நிறுவனங்களுக்குக் கடுமையான போட்டி உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் புதிய சேதியைப் பெறுவதற்காகப் பயனர்கள் தங்களின் வழக்கமான முதன்மைப் பிளிப்கார்ட் செயலி மூலமாகவோ அல்லது இதற்கெனப் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டு வரும் புதிய செயலி மூலமாகவோ எளிதாக உணவு வகைகளை ஆர்டர் செய்யலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், இந்தச் சேவையைத் தடையின்றி வழங்குவதற்கான தொழில்நுட்ப மற்றும் கட்டமைப்புப் பணிகளை இந்நிறுவனம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. முதற்கட்டமாக, அடுத்த 30 நாட்களுக்குள் பெங்களூரு நகரில் சோதனை முறையில்  இந்த உணவு டெலிவரி சேவை அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகத் தெரிகிறது.

பெங்களூருவில் மேற்கொள்ளப்படும் இந்தச் சோதனையின் வெற்றியை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவின் பிற முக்கிய நகரங்களுக்கும் இந்தச் சேவை விரைவில் விரிவுபடுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இ-காமர்ஸ் சேவையில் நீண்ட கால அனுபவம் கொண்டுள்ள பிளிப்கார்ட் நிறுவனம் இப்போது உணவுத் துறையிலும் நுழைந்திருப்பது வர்த்தக வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், வாடிக்கையாளர்களிடையேயும் பேசுபொருளாக மாறியுள்ளது.