சிங்கப்பூரில் உள்ள வணிக வளாகத்தில் இளம்பெண் ஒருவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட இந்திய நபருக்கு, 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், 6 சாட்டையடிகளும் விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த சம்பவம் கடந்த 2023-ம் ஆண்டு மார்ச் 1-ஆம் தேதி, சிங்கப்பூரின் சாங்கி சிட்டி பாயிண்ட் வணிக வளாகத்தில் நடந்தது. இந்தியாவைச் சேர்ந்த அங்கித் சர்மா (46), சிங்கப்பூரில் நிரந்தர குடியுரிமை பெற்றவர். இவர் ஒரு வணிக நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

அன்று, 31 வயது பெண் ஒருவரை பாரில் சந்தித்த அவர், முதலில் வேலை தொடர்பான உரையாடலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. ஆனால், சில நிமிடங்களில் அவர் அந்த பெண்ணிடம் ஆபாசமாக பேச தொடங்கியதாக குற்றச்சாட்டு உள்ளது. இதைத் தவிர்க்க முயன்ற அந்த இளம்பெண், “கழிவறைக்கு சென்று வருகிறேன்” என்று கூறி எழுந்துள்ளார். ஆனால், அவரது பின்னால் தொடர்ந்து சென்ற அங்கித் சர்மா, அருகிலிருந்த தாய்மார்கள் பாலூட்டும் அறைக்குள் அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

அதன்பின்னர், அந்த பெண் ஒருவழியாக அங்கிருந்து தப்பி, போலீசில் புகார் அளித்தார். இதனையடுத்து அங்கித் சர்மா கைது செய்யப்பட்டு, அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது. விசாரணையின் போது, குற்றச்சாட்டுகளை மறுத்த அங்கித் சர்மா, “அந்த பெண்ணின் சம்மதத்துடனேயே நடப்புகள் நடைபெற்றன. மேலும், அந்த அறைக்குள் செல்லும் ஆலோசனையை அவள்தான் சொன்னாள்” எனக் கூறினார்.

ஆனால், அவரது வாதங்களை நீதிமன்றம் நிராகரித்தது. 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்க வேண்டும் என புகார்தாரர் தரப்பு கோரியது. பின்னர், குறைந்தபட்ச தண்டனை அளிக்க வேண்டும் என அவரது வழக்கறிஞர் மனு அளித்தார். இவ்வாறாக சாட்சி ஆதாரங்களை பரிசீலித்த நீதிமன்றம், அங்கித் சர்மாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், 6 சாட்டையடிகளும் விதித்து உத்தரவிட்டது.