இங்கிலாந்தில் உள்ள பிளாக்பூல் விக்டோரியா மருத்துவமனையில் மூத்த இதய அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த டாக்டர், பணியிடத்தில் பெண் பணியாளர்களிடம் தொடர்ச்சியாக பாலியல் சீண்டலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, 6 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு ஆளாகியுள்ளார்.

55 வயதுடைய டாக்டர் அமல் போஸ் என்ற இவர், 2017 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் தன்னுடன் பணியாற்றிய 5 செவிலியர்களிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக 12 குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன.

பிரெஸ்டன் கிரவுன் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் போது, பாதிக்கப்பட்ட பெண்கள் பல்வேறு கடுமையான அனுபவங்களை பகிர்ந்தனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் புதிதாக சேர்ந்த செவிலியர்களாக  இருந்தனர். சிலர் இதனால் வேலையை விட்டு விலகியிருக்க, ஒருபெண் தன்னையே காயப்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்.

வழக்கின் முக்கியமான தருணங்களில் ஒன்று, ஒரு பெண் பணியாளரிடம் கையெழுத்து பெறும் போது, அவர் அணிந்திருந்த சட்டையை பிடித்து அழுத்திய போஸ், பின்னர் “பேனாவை தேடினேன்” எனக் கூறியிருந்தார். மற்றொரு சம்பவத்தில், லாலிபாப் சாப்பிட்டு கொண்டிருந்த பெண்ணிடம், “உனக்காக வேறு ஒன்று கொண்டு வந்திருக்கிறேன்” எனக் கூறியதோடு, பிறர் முன்னிலையில் ஆபாசமாக பேசியதும், இடுப்பு மற்றும் அந்தரங்கப் பகுதிகளை தொட்டு ஆபாசமாக பேசியதோடு செல்போன்களில் பாலுணர்வை தூண்டும் விதமாக குறுஞ்செய்தி அனுப்புவது போன்ற செயல்களிலும் ஈடுபடுவார். பின்னர் இதனை நகைச்சுவை என்று கூறிவிடுவார்.

பல்வேறு பெண்கள், “போஸின் நடத்தை குறித்து முன்னே அறிவுறுத்தப்பட்டோம்”, “அவர் வாட்ஸ்அப் குழுக்களில் பாலுணர்வை தூண்டும் வகை பதிவுகள் பகிர்ந்தார்” எனவும் வாக்குமூலம் அளித்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி இயான் அன்ஸ்வொர்த், “தங்களது பதவியை தவறாக பயன்படுத்தி, பல பெண்களுக்கு துன்பம் அளித்திருக்கிறீர்கள். அவர்களுக்கெதிரான எந்த வருத்த உணர்வும் உங்களிடம் இல்லை” என கடுமையாக கண்டித்தார். மேலும் இதையடுத்து டாக்டர் போஸுக்கு 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.