பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள திராஹ் பள்ளத்தாக்கைச் சேர்ந்த மாத்ரே தாரா என்ற கிராமத்தில், பாகிஸ்தான் விமானப்படை இன்று அதிகாலை விமானம் மூலமாக கடுமையான குண்டுவீச்சு தாக்குதலை நடத்தியது. அதிகாலை 2 மணியளவில் நடைபெற்ற இந்த தாக்குதலில், எட்டு LS-6 வகை வெடிகுண்டுகள் பயன்படுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தாக்குதலில் 30 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் சிறுவர்கள் என்பதும், மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சம்பவ இடத்தில் மீட்புப்படையினர் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை தேடி மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. கைபர் பக்துன்க்வா மாகாணத்தில், பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது. ஆனால், தாக்குதல் பாசறையில் பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர் என்பதாலேயே, மக்களிடையே கடும் சோகமும், அதிர்ச்சியும் ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தான்–ஆப்கானிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள கைபர் பக்துன்க்வா மாகாணம், மலைகளால் சூழ்ந்த இயற்கை மறைவிடமாக இருப்பதால், பயங்கரவாத குழுக்களின் முக்கிய தங்குமிடமாக மாறியுள்ளது. கடந்த ஜனவரி முதல் ஆகஸ்ட் மாதம் வரை மட்டும் இந்த மாகாணத்தில் 605 பயங்கரவாத சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இவற்றில், 139-க்கும் அதிகமான பொதுமக்கள் மற்றும் 79 போலீசார் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஆபரேஷன் சிந்தூர் போன்ற ராணுவ நடவடிக்கைக்குப் பிறகு, பாகிஸ்தானில் இயங்கி வந்த பல பயங்கரவாத அமைப்புகள், தங்களது தலைமையகங்களை கைபர் பக்துன்க்வா பகுதிக்குள் மாற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
