பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிப்பது தொடர்பாக இங்கிலாந்து, கனடா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் வெளியிட்டுள்ள அறிவிப்பு சர்வதேச அளவில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த முடிவுக்கு பாலஸ்தீன அரசு நன்றி தெரிவித்துள்ள நிலையில், இஸ்ரேல் கடும் எதிர்ப்பையும் தெரிவித்துள்ளது.

பாலஸ்தீன பகுதிகள் இரண்டு முக்கிய பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. மேற்கு கரையை முகமது அப்பாஸ் தலைமையிலான பாலஸ்தீன அரசு நிர்வகிக்கிறது. காசா பகுதியை ஹமாஸ் அமைப்பினர் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். கடந்த 2023 அக்டோபர் 7-ம் தேதி, ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் நாட்டுக்குள் புகுந்து பயங்கரவாதத் தாக்குதல் நடத்தியதையடுத்து, இஸ்ரேல் விரைவில் போர் அறிவித்து காசா பகுதியில் மிகுந்த தாக்குதல்களை நடத்தியது.

இந்த போரில் இதுவரை 65,000-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். போர் நிலை தொடரும் நிலையில், தற்போது பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிக்கப் போவதாக மேற்கண்ட நாடுகள் அறிவித்துள்ளன. ஏற்கனவே, 140-க்கும் மேற்பட்ட நாடுகள் பாலஸ்தீனத்தை அங்கீகரித்துள்ளன. ஆனால், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இதனை இன்னும் அங்கீகரிக்கவில்லை. இந்த நிலையில், பாலஸ்தீனை அங்கீகரிக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கடும் கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அதில், “பாலஸ்தீன நாடு இருக்க முடியாது. எங்கள் நாட்டின் மையப்பகுதியில் பயங்கரவாத அரசை உருவாக்க அனுமதிக்கமாட்டோம். அக்டோபர் 7 படுகொலைக்குப் பிறகு, பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் நாடுகள் பயங்கரவாதத்துக்கு பரிசு அளிக்கிறார்கள். ஆனால், இது நடக்க முடியாது. ஜோர்டான் நதிக்கு மேற்கே பாலஸ்தீன அரசு உருவாகாது,” என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும்,  “பல ஆண்டுகளாக உள்ளிருந்து வெளியில் இருந்து வரும் அழுத்தங்களுக்கு எதிராக, அந்த பயங்கரவாத அரசை உருவாக்குவதைத் தடுத்து வந்துள்ளோம். யூதேயா மற்றும் சமாரியாவில் யூத குடியேற்றங்களை இரட்டிப்பாக்கியுள்ளோம். அதே பாதையில் நாங்கள் தொடரும்,” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.