மத்திய கிழக்கில் நிலவிய போர்ச் சூழலால் ஏற்பட்ட எரிபொருள் நெருக்கடியின் காரணமாக, கடந்த பிப்ரவரி மாதம் முதல் எல்பிஜி எரிவாயு சிலிண்டர் விநியோகத்தில் மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது.

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதலால் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால், கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டு, பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு விலை உயர்ந்தது. இதனால் ஹோட்டல் தொழில் மற்றும் வணிக நிறுவனங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தன.

தற்போது அமெரிக்கா – ஈரான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டு, ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்பட்டுள்ளதால், கச்சா எண்ணெய் விலை கணிசமாகக் குறைந்துள்ளது.

இந்தச் சூழலில், வர்த்தக மற்றும் தொழில்துறைக்கான எல்பிஜி சிலிண்டர் விநியோகத்தில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை மத்திய அரசு தற்போது 50 சதவீதம் தளர்த்தியுள்ளது. இதன் மூலம் வர்த்தக நிறுவனங்களுக்கு எரிவாயு விநியோகம் மீண்டும் சீராகும்.

அதே சமயம், வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விநியோகத்தில் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்றும், அது தொடர்ந்து வழக்கம்போல தடையின்றி கிடைக்கும் என்றும் பெட்ரோலிய அமைச்சகம் உறுதி அளித்துள்ளது. அரசின் இந்த முடிவு, ஹோட்டல் மற்றும் சிறு தொழில்கள் நடத்தி வருபவர்களுக்குப் பெரும் நிவாரணமாக அமைந்துள்ளது.