திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் அருகே, தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனைக் கொலை செய்த மனைவி உட்பட மூன்று பேருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தச் சம்பவத்தில், வல்லத்து நம்பிகுளத்தைச் சேர்ந்த முருகன் என்பவர் அவரது மனைவி ஞானஅகிலா மற்றும் அவரது கூட்டாளிகளால் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
மேலும் காதல் நாடகமாடி திட்டமிட்டு நடத்தப்பட்ட இந்த கொடூரக் கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், ஞானஅகிலா, முத்துராஜ் மற்றும் பஞ்சுராஜன் ஆகிய மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கின் விசாரணை திருநெல்வேலி முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. சாட்சிகள் மற்றும் ஆதாரங்களை ஆய்வு செய்த நீதிபதி செல்வம், குற்றம் சாட்டப்பட்ட மூவருக்கும் தலா ஒரு ஆயுள் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார்.
மேலும், கணவரைக் கடத்திய குற்றத்திற்காக மனைவி ஞானஅகிலாவிற்கு கூடுதலாக 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் 15 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
