கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தனியார் நிறுவன ஊழியர் ஒருவரை அவரது மனைவியே கள்ளக்காதலனுடன் சேர்ந்து படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ஜஸ்டின் ராஜசேகர் என்பவர் ஓசூரில் தங்கி பணியாற்றி வந்த நிலையில், கடந்த 2017-ம் ஆண்டு மர்மமான முறையில் காணாமல் போனார்.
மேலும் அவரது வீட்டில் ரத்தக்கறைகள் இருந்ததைக் கண்டு அக்கம் பக்கத்தினர் அளித்த புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், ஜஸ்டினின் மனைவி இந்து சன்னி தனது கள்ளக்காதலன் லிண்டோ என்பவருடன் இணைந்து, கணவரின் கழுத்தை அறுத்துக் கொலை செய்து உடலைச் சுடுகாட்டில் புதைத்தது அம்பலமானது.
இந்தக் கொடூரக் கொலை தொடர்பான வழக்கு ஓசூர் கூடுதல் மாவட்ட செசன்சு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், தற்போது இதற்கான இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட இந்து சன்னி மற்றும் அவரது கள்ளக்காதலன் லிண்டோ ஆகிய இருவருக்கும் தலா இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி சந்தோஷ் அதிரடி தீர்ப்பளித்தார்.
மேலும், குற்றத்தை மறைத்ததற்காக 5 ஆண்டு சிறை தண்டனையும், 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. பல ஆண்டுகளுக்குப் பிறகு வழங்கப்பட்டுள்ள இந்தத் தீர்ப்பு, கள்ளக்காதல் மோகத்தால் குடும்ப உறவைச் சிதைப்பவர்களுக்கு ஒரு பாடமாக அமைந்துள்ளது.
