மகாராஷ்டிரா மாநிலம் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கி முன்னேறி வரும் வேளையில், கட்சிரோலி மாவட்டத்தின் குக்கிராமங்களில் அடிப்படை சுகாதார வசதிகள் இன்றும் எட்டாக்கனியாகவே உள்ளன.
எட்டாப்பள்ளி தாலுகாவில் உள்ள அல்தாண்டி டோலா கிராமத்தைச் சேர்ந்த ஒன்பது மாத கர்ப்பிணி ஆஷா சந்தோஷ் கிரங்கா, முறையான சாலை வசதி இல்லாததால் பிரசவத்திற்காக அடர்ந்த காட்டுப்பாதை வழியாக சுமார் 6 கிலோமீட்டர் தூரம் நடந்தே சென்றுள்ளார். உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
ஆனால், துரதிர்ஷ்டவசமாக கருவிலேயே குழந்தை உயிரிழந்ததுடன், ரத்த அழுத்தம் அதிகரித்ததால் ஆஷாவும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்திய சுகாதாரத் துறை அதிகாரிகள், ஆஷா ஒரு பூசாரியிடம் நாட்டு வைத்தியம் எடுத்துக்கொண்டதே அவரது மரணத்திற்கு காரணம் எனக் கூறுகின்றனர்.
ஆனால், சாலை வசதி இல்லாததால் கர்ப்பிணி பெண் நீண்ட தூரம் நடக்க வேண்டியிருந்ததும், அவர் இறந்த பிறகு பிரேதப் பரிசோதனை செய்யக்கூட மருத்துவர்கள் இல்லாததால் உடல் 40 கிலோமீட்டர் தூரம் அலைக்கழிக்கப்பட்டதும் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒருபுறம் பிரம்மாண்ட வளர்ச்சித் திட்டங்கள் பேசப்பட்டாலும், மறுபுறம் அடிப்படை மருத்துவ வசதியின்றி ஒரு தாயும் சேயும் உயிரிழந்திருப்பது அப்பகுதியின் அவல நிலையை வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளது.
