வங்கதேசத்தில் சிறுபான்மையினரான இந்துக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களைக் காரணம் காட்டி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணியிலிருந்து வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஷ்தபிசுர் ரகுமானை விடுவிக்குமாறு பிசிசிஐ உத்தரவிட்டதற்கு காங்கிரஸ் எம்பி சசி தரூர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் (X) வலைதளப் பதிவில், விளையாட்டு வீரர் ஒருவரை அவரது நாட்டின் அரசியல் சூழலுக்குப் பொறுப்பாக்குவது முறையல்ல என்றும், விளையாட்டில் புகுத்தப்படும் இந்த அர்த்தமற்ற அரசியல் ஆரோக்கியமானதல்ல என்றும் சாடியுள்ளார்.

“>

 

“ஒரு நாடு, ஒரு தனிமனிதன், அவரது மதம் – இதில் நாம் யாரைத் தண்டிக்கிறோம்?” என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், ரூ. 9.20 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட ஒரு திறமையான வீரரை மதம் மற்றும் அரசியல் காரணங்களுக்காகத் தண்டிப்பது விளையாட்டுத் துறைக்குச் செய்யும் அநீதி எனத் தெரிவித்துள்ளார்.

வங்கதேசத்தில் நடக்கும் வன்முறைகளுக்கும் அந்த நாட்டு விளையாட்டு வீரருக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டிய தரூர், அண்டை நாடுகளை விளையாட்டு ரீதியாகத் தனிமைப்படுத்துவது எந்தப் பயனும் அளிக்காது என்றும் வலியுறுத்தியுள்ளார்.