மேற்கு ஆசியாவில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஈரானால் முடக்கப்பட்ட ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இரண்டு இந்திய எரிவாயு கப்பல்கள் பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டுள்ளன. இதற்குப் பின்னால் இந்தியா மற்றும் ஈரான் இடையே நடைபெற்ற ஒரு முக்கியமான ரகசிய ஒப்பந்தம் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈரானிய தீவான ‘கார்க்’ (Kharg) மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, ஈரான் தனது கட்டுப்பாட்டில் உள்ள ஹார்முஸ் ஜலசந்தியை மூடியது. இந்தியாவின் 40 சதவீத கச்சா எண்ணெய் மற்றும் கத்தாரிலிருந்து வரும் எல்.பி.ஜி (LPG) எரிவாயு இந்த வழித்தடம் வழியாகவே வருகிறது. ஜலசந்தி மூடப்பட்டதால் இந்தியாவின் எரிபொருள் விநியோகம் முடங்கும் அபாயம் ஏற்பட்டது.
சர்வதேச விவகாரங்களுக்கான நிபுணர் பிரம்மா செல்லானி பகிர்ந்துள்ள தகவலின்படி, தில்லியில் உள்ள வெளியுறவுத் துறையும், ஈரான் தலைமையும் ஒரு ‘கொடுக்கல் வாங்கல்’ அடிப்படையில் ஒப்பந்தம் செய்துள்ளன.
இதன்படி, இந்தியாவில் தங்கியிருந்த சுமார் 180 ஈரானிய கடற்படை வீரர்களைச் சிறப்பு விமானம் மூலம் ஈரான் திரும்ப இந்தியா அனுமதி அளித்தது. இதற்குப் பிரதிபலனாக, ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கியிருந்த இந்தியாவின் ‘சிவாலிக்’ மற்றும் ‘நந்தாதேவி’ ஆகிய இரண்டு எல்.பி.ஜி கப்பல்களை ஈரான் விடுவித்துள்ளது.
கடந்த மார்ச் 4-ஆம் தேதி, அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் ஈரானின் ‘ஐ.ஆர்.ஐ.எஸ் தேனா’ (IRIS Dena) என்ற கப்பலை மூழ்கடித்தது. அப்போது உயிர் பிழைத்த மற்றும் அருகில் இருந்த ‘ஐ.ஆர்.ஐ.எஸ் லவான்’ (IRIS Lavan) கப்பலைச் சேர்ந்த 180 வீரர்களுக்குக் கொச்சியில் இந்தியா மனிதாபிமான அடிப்படையில் புகலிடம் அளித்தது. அந்த வீரர்களைத் தற்போது ஈரான் திரும்ப இந்தியா உதவியதால், அதற்குப் பதிலாக இந்தியக் கப்பல்களை ஈரான் விடுவித்துள்ளது.
இருப்பினும், தற்போதைய நிலவரப்படி இன்னும் இந்தியாவின் 22 கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் விடுவிக்கப்பட்ட இரண்டு கப்பல்களும் 92 ஆயிரம் டன் எல்.பி.ஜி எரிவாயுவைச் சுமந்து கொண்டு இந்தியா வந்து சேர்ந்துள்ளன. இலங்கையில் உள்ள ஈரானிய வீரர்களை ஒப்படைக்க இலங்கை அரசு தயக்கம் காட்டும் நிலையில், இந்தியா மனிதாபிமான அடிப்படையில் எடுத்த முடிவு அதன் எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்த உதவியுள்ளது.
