மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் போர் பதற்றம் காரணமாக, முக்கிய கடல் வழிப்பாதையான ‘ஹார்முஸ்’ ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளது. இதனால் உலக நாடுகளுக்குக் கச்சா எண்ணெய் விநியோகத்தில் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், அங்கு போர்க்கப்பல்களை அனுப்ப வேண்டுமென்ற அமெரிக்காவின் கோரிக்கையைச் சீனா அதிரடியாக நிராகரித்துள்ளது.

எரிபொருள் தட்டுப்பாடு அச்சம் உலகின் கச்சா எண்ணெய் போக்குவரத்தில் மிக முக்கியமான வழித்தடமாகக் கருதப்படுவது ஹார்முஸ் ஜலசந்தி. இப்பாதையை ஈரான் மூடியுள்ளதால் இந்தியா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட ஆசிய நாடுகள் எரிபொருள் தட்டுப்பாட்டைச் சந்திக்கும் சூழல் உருவாகியுள்ளது.

இந்த நெருக்கடியைச் சமாளிக்க, ஹார்முஸ் ஜலசந்தி வழியாகத் தங்களது சரக்குக் கப்பல்கள் பாதுகாப்பாகச் செல்வதை உறுதி செய்ய, சம்பந்தப்பட்ட நாடுகள் அங்கு போர்க்கப்பல்களை அனுப்ப வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கோரிக்கை விடுத்திருந்தார். குறிப்பாகச் சீனா, பிரான்ஸ், ஜப்பான், தென்கொரியா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் தங்களது கடற்படைப் பாதுகாப்பை அங்கு பலப்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

ஆனால் அமெரிக்காவின் இந்த அழைப்பைச் சீனா ஏற்க மறுத்துவிட்டது. இது குறித்துச் சீன வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

“மத்திய கிழக்கு நாடுகளின் நேர்மையான நண்பராகவும், முக்கியமான கூட்டாளியாகவும் சீனா இருந்து வருகிறது. தற்போதைய மோதலில் ஈடுபட்டுள்ள தரப்புகள் உட்பட, சம்பந்தப்பட்ட அனைத்து நாடுகளுடனும் சீனா தொடர்ந்து ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கும். பிராந்தியத்தில் பதற்றத்தைக் குறைத்து அமைதியை நிலைநாட்டவே சீனா விரும்புகிறது.

இதன் மூலம், ராணுவ நடவடிக்கைகளில் இறங்குவதை விட, தூதரக ரீதியான பேச்சுவார்த்தைகள் மூலமே இப்பிரச்சினைக்குத் தீர்வுகாண விரும்புவதாகச் சீனா தெளிவுபடுத்தியுள்ளது. மேலும் அமெரிக்காவின் கோரிக்கையைச் சீனா நிராகரித்துள்ளது, சர்வதேச அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.