பிரபல கன்னடத் திரைப்பட நடிகை கிருஷி தபாண்டாவின் பெங்களூரு அடுக்குமாடி குடியிருப்பில், அவரது நெருங்கிய நண்பரான வைஷாக் (33) என்பவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்தத் திரையுலகையும், ரசிகர்களையும் உலுக்கியெடுத்துள்ளது. நடிகையின் வீட்டில் நள்ளிரவில் நடந்த இந்த விபரீதச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வைஷாக்கின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள பெங்களூரு போலீசார், இது கொலையா அல்லது தற்கொலையா என்ற பலத்த சந்தேகக் கோணத்தில் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். ​போலீசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில், மரணமடைந்த வைஷாக் ஏற்கனவே சில குற்றவியல் வழக்குகளில் சிக்கி போலீஸ் வளையத்தில் இருந்தவர் என்ற அதிர வைக்கும் பின்னணித் தகவல் வெளிவந்துள்ளது.

நடிகை கிருஷி தபாண்டாவின் குடியிருப்பில் வைஷாக் ஏன் தங்கியிருந்தார், அவரது மரணத்திற்கும் நடிகைக்கும் ஏதேனும் தொடர்பிருக்கா, அல்லது பழைய வழக்குகளின் பகை காரணமாக ஏதேனும் அசம்பாவிதம் நடந்ததா என்ற பல கோணங்களில் தனிப்படை போலீசார் அக்குவேறு ஆணிவேறாகத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பிரபல நடிகையின் வீட்டில் நடந்துள்ள இந்த மர்ம மரணம் பெங்களூருவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.