பெங்களூரைச் சேர்ந்த ஜோஷிபா என்ற பெண் வழக்கறிஞர், தனது நண்பர் ஒருவருக்குக் கடனாகக் கொடுத்த 5 லட்சம் ரூபாயைத் திரும்பப் பெற சட்டப்படி வழக்குத் தொடர வேண்டாம் என்று எடுத்த முடிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் வழக்கறிஞராக இருந்தபோதிலும், நீதிமன்றம் மூலம் பணத்தை மீட்பதற்கான நீண்ட சட்ட நடைமுறைகளும், வழக்குத் தொடர்ந்தாலும் பணம் நிச்சயம் திரும்பக் கிடைக்கும் என்ற உத்தரவாதம் இல்லாததும் அவரை இந்த முடிவை எடுக்க வைத்துள்ளன.

“>

இவ்வளவு பெரிய தொகையைத் திரும்பக் கேட்பதை விட, மன அமைதிதான் மிக முக்கியம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், இதைவிடப் பெரிய தொகையாக இருந்தால் மட்டுமே சட்டப் போராட்டம் நடத்துவது நியாயமாக இருக்கும் என்றும் அவர் தனது கருத்தைப் பகிர்ந்துள்ளார்.

இந்த கசப்பான அனுபவம் நண்பர்களுடனான தனது பணப் பரிவர்த்தனை அணுகுமுறையையே முற்றிலும் மாற்றிவிட்டதாக ஜோஷிபா தெரிவித்துள்ளார். இனிவரும் காலங்களில், ஒருவேளை அந்தப் பணம் திரும்ப வராமல் போனால் கூட நம்மால் தாங்கிக்கொள்ள முடியும் என்று தோன்றும் தொகையை மட்டுமே நண்பர்களுக்குக் கடனாகக் கொடுக்கப்போவதாக அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் “கர்மா வேலை செய்யுமா இல்லையா என்று எனக்குத் தெரியாது”, ஆனால் இந்தச் சூழ்நிலையை இத்துடன் கடந்து செல்ல விரும்புகிறேன்” என்று பதிவிட்டுள்ள இவரது வீடியோ, பணத்தை விட மன நிம்மதியே முக்கியம் என்பதை உணர்த்துவதாகப் பலராலும் சமூக வலைத்தளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது.