அதிநவீன கட்டிடங்களுக்கும், சொகுசு வாழ்க்கைக்கும் பெயர்பெற்ற துபாய் நகரம், தற்போது ஈரான் – அமெரிக்கா இடையிலான போரினால் ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. போர் தொடங்கிய நாள் முதல் இதுவரை சுமார் 294 ஏவுகணைகள் துபாயைக் குறிவைத்து வீசப்பட்டுள்ளன.
பாதுகாப்பான இடமாகக் கருதப்பட்ட துபாயிலிருந்து இதுவரை 10,000-க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் வெளியேறியுள்ளனர். விமான நிலையம் அடிக்கடி மூடப்படுவதால் நிமிடத்திற்கு 9 கோடி ரூபாய் வீதம் தினமும் கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. சுமார் 80% சுற்றுலா முன்பதிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், எப்போதும் பிஸியாக இருக்கும் ஹோட்டல்கள் மற்றும் கிளப்புகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.
துபாயின் உயிர்நாடியாகக் கருதப்படும் ரியல் எஸ்டேட் மற்றும் சுற்றுலாத் துறை இந்தப் போரினால் மிக மோசமான சரிவைச் சந்தித்துள்ளது. கடந்த 15 நாட்களில் மட்டும் ரியல் எஸ்டேட் குறியீடு 30% வீழ்ச்சியடைந்துள்ளதுடன், பிரீமியம் சொத்துக்களின் வாடகை 40% வரை குறைந்துள்ளது.
குறிப்பாக, துபாய் ரியல் எஸ்டேட்டில் அதிக முதலீடு செய்துள்ள இந்தியர்களுக்கு இது மிகப்பெரிய அடியாக அமைந்துள்ளது. 2026-க்குள் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை 2.5 கோடியாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது போர்ச் சூழலால் சுமார் 3 கோடி சுற்றுலாப் பயணிகள் வருகை குறையக்கூடும் என அஞ்சப்படுகிறது.
துபாயின் பொருளாதார அழிவை உலகுக்குத் தெரியாமல் மறைக்க ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ள போதிலும், ஈரானின் தொடர் தாக்குதல்கள் உலகளாவிய முதலீட்டாளர்களின் நம்பிக்கையைத் தகர்த்து வருகின்றன.
