ஷாம்லி அருகே உள்ள மல்காபூர் கிராமத்தில் மஷ்குரா என்ற பெண் கொல்லப்பட்ட வழக்கில், அவரது மாமனார் அப்பாஸ் மற்றும் கணவர் சல்மான் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். லூதியானாவில் வேலை பார்த்து வந்த கணவர் இல்லாத நேரத்தில், மாமனார் அப்பாஸ் தனது மருமகளைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதோடு, அவரது நடத்தையைத் தவறாகச் சித்தரித்து மிரட்டியுள்ளார்.
கடந்த பிப்ரவரி 14-ம் தேதி மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றபோது மஷ்குரா எதிர்த்ததால், ஆத்திரமடைந்த அப்பாஸ் தனது மகனுடன் போனில் பேசி திட்டமிட்டு, அன்றிரவே மருமகளைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார்.
இந்தக் கொலையை மறைக்க மாமனார் அப்பாஸ் ஒரு சினிமா பாணியில் நாடகமாடியுள்ளார். அறையை உள்ளே இருந்து பூட்டிவிட்டு ரகசியமாக வெளியேறிய அவர், மறுநாள் காலையில் கதவு திறக்கவில்லை என அண்டை வீட்டாரை அழைத்து கதவை உடைக்கச் செய்துள்ளார்.
யாரோ உள்ளே புகுந்து கொலை செய்துவிட்டு கதவைப் பூட்டிச் சென்றது போலக் காட்ட முயன்றார். ஆனால், போலீசாரின் தீவிர விசாரணையில் உண்மைகள் வெளிவந்தன. ஆதாரங்களை அழிக்க உதவிய கணவர் சல்மானையும், கொலை செய்த மாமனார் அப்பாஸையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
