உத்தரப் பிரதேச மாநிலத்தில் பிரசவ வலியைத் தாங்க முடியாத 35 வயது கர்ப்பிணிப் பெண், காய்கறி வெட்டும் கத்தியால் தனது வயிற்றைத் தானே அறுத்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிருக்குப் போராடிய நிலையில் அவருக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் நன்காய் (35). இவரது கணவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் காலமானார். இதனால் வீட்டில் தனியாக வசித்து வந்த நன்காய்க்கு, கடந்த வியாழக்கிழமை மதியம் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

வலி தாங்க முடியாமல் துடித்த அவர், ஒரு கட்டத்தில் விரக்தியில் வீட்டில் இருந்த காய்கறி வெட்டும் கத்தியால் தனது வயிற்றைத் தானே அறுத்துள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அண்டை வீட்டார், ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை மீட்டு  ஆரம்பச் சுகாதார நிலையத்திற்குக் கொண்டு சென்றனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே, அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. குழந்தை ஆரோக்கியமாக இருந்தாலும், கத்தியால் ஏற்படுத்திக் கொண்ட காயத்தின் காரணமாக நன்காயின் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. அவரை மாவட்ட அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது, அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து மருத்துவமனை கண்காணிப்பாளர் கூறுகையில்:

வியாழக்கிழமை மாலை 3:20 மணியளவில் அவர் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டார். வயிற்றுப் பகுதி ஆழமாக அறுக்கப்பட்டிருந்ததால், குடல் வெளியே வந்த நிலையில் இருந்தது. ரத்தப்போக்கும் மிக அதிகமாக இருந்ததால் அவரது நிலை கவலைக்கிடமானது,” எனத் தெரிவித்தார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேல் சிகிச்சைக்காக லக்னோவில் உள்ள உயர் மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டுள்ளார். இதற்கிடையில், மருத்துவமனை படுக்கையில் இருந்தபடி அவர் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதில், “வலி தாங்க முடியாமல் தான் இப்படிச் செய்தேன்” என அவர் வேதனையுடன் கூறியுள்ளார். மேலும் கணவரை இழந்து தனிமையில் வாடிய பெண்ணுக்கு ஏற்பட்ட இந்த நிலை, அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.