டேராடூனைச் சேர்ந்த பெண் ஒருவர், தான் வேலை செய்த வீட்டில் ஒரு வருடத்திற்கு முன்பு திருடிய நகைகளை அணிந்து இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோ வெளியிட்டதால் சிக்கியுள்ளார்.
அந்தப் பெண், தனது முன்னாள் முதலாளியின் வீட்டில் இருந்த லாக்கரை நோட்டமிட்டு, அங்கிருந்து வைர மோதிரங்கள், தங்கச் சங்கிலி மற்றும் வைரப் பதக்கம் உள்ளிட்ட சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகளைத் திருடியுள்ளார்.
திருடிய பிறகு, அந்த நகைகள் விலை உயர்ந்தவை என்பதால் எங்கும் விற்க முடியாமல் தவித்த அவர், துணிச்சலாக அந்த நகைகளை அணிந்து ரீல்ஸ் செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோவை திருட்டுப் போன நகைகளின் உரிமையாளரின் நண்பர் ஒருவர் தற்செயலாகப் பார்த்தார். உடனே அந்த உரிமையாளர் வீடியோவைச் சரிபார்த்து, தனது நகைகளை அடையாளம் கண்டு போலீசில் புகார் அளித்தார்.
விசாரணையில், தான் திருடிய நகைகளை அணிந்து கெத்தாக வீடியோ போட்டது அவருக்கு வினையாக முடிந்தது. திருடிய நகைகளை மறைத்து வைத்திருந்த அந்தப் பெண் கைது செய்யப்பட்டதுடன், சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
சமூக வலைதளங்களில் பிரபலமாக வேண்டும் என்ற ஆசை, குற்றவாளியைக் காட்டிக்கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
