இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், இந்திய அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளர் மோர்னே மோர்க்கல் இது குறித்துப் பேசியுள்ளார்.

சமீபத்திய போட்டிகளில் சஞ்சு சாம்சன் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தாலும், சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோரை இப்போதைக்கு நீக்கும் எண்ணம் அணி நிர்வாகத்திற்கு இல்லை என்பதை அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

உலகக்கோப்பை வென்ற அணியில் சஞ்சு சாம்சன் இருந்ததையும், ஐபிஎல் தொடரில் அவர் காட்டிய சிறப்பான ஆட்டத்தையும் சுட்டிக்காட்டிய மோர்க்கல், வீரர்களின் நம்பிக்கையைக் காக்க வேண்டியது அணி நிர்வாகத்தின் கடமை என்று கூறியுள்ளார்.

சமூக வலைதளங்களில் நடக்கும் விவாதங்களுக்காக மட்டும் அவசரப்பட்டு முடிவுகளை எடுக்க முடியாது என்று கூறிய மோர்க்கல், அதே வேளையில் வைபவ் சூர்யவன்ஷியின் திறமையைப் பாராட்டியுள்ளார். வெறும் 15 வயதிலேயே இந்திய அணியின் நெட் பயிற்சியில் அவர் காட்டிய வேகம் மற்றும் நுணுக்கமான ஆட்டம் பயிற்சியாளர்களைப் பெரிதும் ஈர்த்துள்ளது.

இந்திய அணியின் சூழலுக்கு அவர் மிகச் சிறப்பாக ஒத்துப்போயுள்ளதாகத் தெரிவித்துள்ள மோர்க்கல், சரியான தருணம் வரும்போது வைபவ் தனது முழுத் திறமையையும் வெளிப்படுத்துவார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.