காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஷாம்ஷியா (26) என்ற பெண், தனது 10 வயது மகள் மற்றும் 5 வயது மகனுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு இவரது கணவர் தொழில் நஷ்டம் காரணமாக தற்கொலை செய்து கொண்ட நிலையில், ஷாம்ஷியா இருசக்கர வாகன விற்பனை நிலையத்தில் வேலை பார்த்து குழந்தைகளை வளர்த்து வந்தார்.
கடன் தொல்லை அதிகமாக இருந்ததாகக் கூறப்படும் நிலையில், தனது தாய் வீட்டுக்குச் செல்வதாகக் கூறிச் சென்றவர், குழந்தைகளுடன் விவசாயக் கிணற்றில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் மூன்று பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸார் நடத்திய சோதனையில் ஷாம்ஷியா எழுதி வைத்த கடிதம் ஒன்று கிடைத்துள்ளது; அதில் கடன் தொல்லை காரணமாகவே இந்த முடிவை எடுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தற்கொலைக்கு கடன் பிரச்சினைதான் உண்மையான காரணமா அல்லது வேறு ஏதேனும் பின்னணி உள்ளதா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
