பீகாரில் நடந்த ஒரு ஊழல் வழக்கில், சாட்சியாக வைக்கப்பட்டிருந்த ரூபாய் நோட்டுகளை எலிகள் கடித்துத் தின்றுவிட்டதாகக் கூறப்பட்டதைக் கேட்டு உச்சநீதிமன்ற நீதிபதிகளே வாயடைத்துப் போயுள்ளனர். 2014-ல் லஞ்சம் வாங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்ட பெண் அதிகாரி ஒருவரின் மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த போதுதான் இந்த விசித்திரத் தகவல் வெளியானது.
அந்த அதிகாரி லஞ்சமாகப் பெற்ற 10,000 ரூபாய் நோட்டுகளை நீதிமன்றத்தில் ஒப்படைக்க முடியாததற்குக் காரணமாக, “அவை பாதுகாப்பகத்தில் இருந்த போது எலிகளால் கடித்துக் குதறப்பட்டுவிட்டன” என்று அரசுத் தரப்பு கூறியுள்ளது.இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த நீதிபதிகள் ஜே.பி. பார்திவாலா மற்றும் கே.வி. விஸ்வநாதன் தலைமையிலான அமர்வு, “நோட்டுகளை எலிகள் தின்றுவிட்டன என்ற விளக்கம் நம்பும்படி இல்லை” என அதிருப்தி தெரிவித்தனர்.
இப்படி அலட்சியமாக ஆதாரங்களைக் கையாள்வதால் அரசுக்கு எவ்வளவு வருவாய் இழப்பு ஏற்படும் என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். நோட்டுகளே இல்லாமல் அந்தப் பெண் அதிகாரிக்கு உயர்நீதிமன்றம் 4 ஆண்டுகள் தண்டனை வழங்கியது எப்படி என்பது குறித்தும் ஆய்வு செய்யப்போவதாகத் தெரிவித்த உச்சநீதிமன்றம், தற்போது அந்தப் பெண் அதிகாரிக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. எலிகளின் இந்தப் ‘பணப்பசி’ விவகாரம் இப்போது இந்தியா முழுவதும் பேசுபொருளாகியுள்ளது.
