“ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் பி.எல்.ஓ-க்களைக் கொண்டு திமுகவினர் 300 கள்ள வாக்குகளைச் சேர்த்துள்ளனர்” என்று அதிமுக பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சி.சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார்.

திண்டுக்கல் மேற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அவரது தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:

இன்றும் நாளையும் நடைபெறும் வாக்காளர் சிறப்பு திருத்த முகாம்களை அதிமுக நிர்வாகிகள் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வீடு வீடாகச் சென்று விடுபட்ட வாக்காளர்கள் மற்றும் புதிய வாக்காளர்களைச் சேர்க்க உதவ வேண்டும். குறிப்பாக, படிவம் 6, 7 மற்றும் 8-ன் கீழ் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் செய்யும் பணிகளில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும். கடந்த முறை இதில் மிகப்பெரிய குளறுபடிகள் நடந்துள்ளளன.

பிரதமர் மோடி தற்போது 100 நாள் வேலைத் திட்டத்தை 125 நாட்களாக உயர்த்தி அறிவித்துள்ளார். இது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் வேண்டுகோளை ஏற்று எடுக்கப்பட்ட முடிவாகும். வரும் 2026-ல் எடப்பாடியார் தலைமையில் மீண்டும் நல்லாட்சி அமையும் போது, இது 150 நாட்களாக உயர்த்தப்படும். ஆனால், இந்தத் திட்டத்தையே நிறுத்திவிடுவார்கள் என திமுகவினர் பொய் பிரசாரம் செய்கின்றனர். பொதுமக்கள் இதனை நம்ப வேண்டாம்.

தேர்தலின் போது கள்ள ஓட்டு போடுவதில் திமுகவினர் வல்லவர்கள். ஒவ்வொரு பூத்திலும் பி.எல்.ஓ-க்கள் (வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள்) மூலம் தங்களுக்குச் சாதகமாக 300 வாக்குகளைச் சேர்த்துள்ளனர். இதனை நீக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட உள்ளது. அதிமுக பூத் ஏஜெண்டுகள் மிகவும் விழிப்புடன் பொறுப்புடன் செயல்பட வேண்டும்.

விண்ணை முட்டும் வகையில் உயர்ந்துள்ள விலைவாசி உயர்வு குறித்து மக்களிடம் துண்டுப் பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும், அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் பிறந்தநாள் விழாக்களைச் சிறப்பாகக் கொண்டாட வேண்டும். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை நடத்தி பொதுமக்களை உற்சாகப்படுத்த வேண்டும் இவ்வாறு அவர் பேசினார்.