திருப்பூரில் பி.எஸ்.என்.எல் தொலைத்தொடர்பு கோபுரத்தின் மீது ஏறிய பனியன் தொழிலாளி ஒருவர், தேசியக்கொடி மற்றும் அதிமுக கொடியைக் கட்டி, பட்டாசுகளை வீசி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாநகராட்சி, தாராபுரம் சாலை கோவில்வழிப் பகுதியில் சுமார் 40 அடி உயரமுள்ள பி.எஸ்.என்.எல் (BSNL) கோபுரம் உள்ளது. இன்று காலை, அப்பகுதியைச் சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் திடீரென அந்த கோபுரத்தின் உச்சிக்கு ஏறினார். கோபுரத்தின் உச்சியில் நின்றுகொண்டு, தன்னிடம் இருந்த தேசியக்கொடி மற்றும் அதிமுக கொடியை அதில் கட்டினார்.

“நாட்டின் சிஸ்டம் சரியில்லை; அரசியலில் மாற்றம் வர வேண்டும்” என முழக்கமிட்ட அவர், அங்கிருந்தவாறே பட்டாசுகளைக் கொளுத்தி கீழே வீசி ரகளையில் ஈடுபட்டார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், உடனடியாக போலீஸாருக்கும் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்த போலீஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். கோபுரத்தின் உச்சியில் இருந்த நபரிடம் அவர்கள் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர், “எனது கோரிக்கைகள் அனைத்து ஊடகங்களிலும் ஒளிபரப்பாக வேண்டும்; அதிமுக தலைமை எனது கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வர வேண்டும்” எனத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.

நெடுநேரம் நீடித்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு, போலீஸாரின் அறிவுறுத்தலை ஏற்று அவர் தானாகவே கீழே இறங்கி வந்தார். போலீஸார் நடத்திய விசாரணையில், அவர் மதுரை வாடிப்பட்டியைச் சேர்ந்த மூக்கையா (42) என்பதும், தற்போது திருப்பூரில் தங்கி பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருவதும் தெரியவந்தது.

குறிப்பிடத்தக்க விஷயமாக, கடந்த ஆண்டு ஜனவரி மாதமும் இதே நபர் இதே தாராபுரம் சாலையில் உள்ள வேறொரு கோபுரத்தில் ஏறி இது போன்ற பரபரப்பை ஏற்படுத்தியவர் என்பது விசாரணையில் அம்பலமானது. இந்தச் சம்பவத்தை வேடிக்கை பார்க்க நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலும், பரபரப்பும் நிலவியது. விசாரணைக்குப் பின் போலீஸார் அவரை அழைத்துச் சென்றனர்.