அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன், அக்கட்சியின் மாநில நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளராகப் பொறுப்பேற்ற பின்னர் முதல்முறையாக மேட்டுப்பாளையம் பகுதிக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

கோபிசெட்டிபாளையத்தில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வழியில் ஆலாங்கொம்பு பகுதியில் அவருக்குத் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது அங்கிருந்த எம்ஜிஆர் சிலைக்கு அவர் மாலை அணிவிக்க முயன்றபோது, அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துச் சிலையைப் பூட்டினர்.

இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மேட்டுப்பாளையம் வந்தடைந்த அவர், அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கச் சென்றபோதும் அதேபோலப் பூட்டு போடப்பட்டிருந்ததால், அங்கு வைக்கப்பட்டிருந்த அண்ணாவின் உருவப் படத்திற்கு மட்டும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து தேக்கம்பட்டியில் உள்ள வன பத்திரகாளியம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த செங்கோட்டையன், அங்கு நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். பின்னர் காரமடை அரங்கநாதர் கோவிலிலும் தரிசனம் செய்த அவர், இறுதியாக மேட்டுப்பாளையம் எல். எஸ். புரத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் அலுவலகத்தைத் திறந்து வைத்தார்.

செங்கோட்டையனின் இந்த வருகையின் போது அண்ணா மற்றும் எம்ஜிஆர் சிலைகளுக்கு மாலை அணிவிக்க அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்துப் பூட்டு போட்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.