தமிழக சட்டமன்றத் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைக்கும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார். கோவையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த செல்வப்பெருந்தகை, தேர்தல் முடிவுகள் குறித்து வெளியாகியுள்ள கணிப்புகளைச் சாடினார். அவர் கூறியதாவது, தமிழகத்தில் நல்லாட்சி தொடர வேண்டும் என்பதே மக்களின் விருப்பம். தேர்தலுக்கு முன்பு மக்களின் மனநிலை எப்படி இருந்ததோ, அதே நிலைதான் தற்போதும் தொடர்கிறது. ஒரே நாளில் மக்களின் மனநிலை மாறுவதற்கு எந்த வாய்ப்பும் இல்லை. நாங்கள் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம் என்பதில் உறுதியாக இருக்கிறோம்.
கூட்டணிக்கு 145 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என வெளியாகி வரும் கணிப்புகள் குறித்து அவர் பேசுகையில், சில ஊடகங்கள் 145 தொகுதிகள் என்று சொல்வது உண்மையான கருத்துக்கணிப்பு அல்ல; அது திட்டமிட்ட ‘கருத்துத் திணிப்பு’. இன்னும் 24 மணி நேரம்தான் இருக்கிறது, நாளை முடிவுகள் வரும்போது அனைவரும் உண்மை நிலையைச் சந்திப்போம். முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் தீவிரப் பிரச்சாரம் செய்துள்ளார். அதேபோல் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரின் பிரச்சாரமும் மக்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 5 ஆண்டுகால சிறப்பான ஆட்சிக்கும், தலைவர்களின் கடின உழைப்பிற்கும் நிச்சயம் பலன் கிடைக்கும். யார் ஆள வேண்டும் என்பதில் தமிழக மக்கள் மிகுந்த தெளிவோடு இருக்கிறார்கள் என்று செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.
