வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தக் கோரி திமுக சார்பில் தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் தமிழக டிஜிபி ஆகியோருக்கு அவசரக் கடிதம் எழுதப்பட்டுள்ளது. திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எழுதியுள்ள இந்த கடிதத்தில், நாளை வாக்கு எண்ணும் பணியின் போது மாநிலம் முழுவதும் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்க கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். குறிப்பாக, தேர்தல் முடிவுகள் வெளியாகும் நேரத்தில் தேவையற்ற குழப்பங்களை தவிர்க்க போலீஸ் பாதுகாப்பு மிக அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அந்த கடிதத்தில், வாக்கு எண்ணும் மையங்களில் பாரதிய ஜனதா கட்சியினர் இடையூறு ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாக தங்களுக்கு தகவல் கிடைத்துள்ளதாக ஆர்.எஸ்.பாரதி பகீர் புகாரை முன்வைத்துள்ளார். இதன் காரணமாக, வாக்கு எண்ணும் மையங்கள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நாளை கூடுதல் போலீசாரை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் வரை எந்தவொரு அசம்பாவிதமும் நடக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதே திமுகவின் இந்த கோரிக்கையின் முக்கிய நோக்கமாகப் பார்க்கப்படுகிறது.
