அருணாச்சல பிரதேசத்தின் கெசாங் மாவட்டத்தில் அமைந்துள்ள கஸ்தூர்பா காந்தி பாலிகா வித்யாலயா (KGBV) பள்ளியைச் சேர்ந்த 90 மாணவிகள், ஆசிரியர்கள் பற்றாக்குறையை எதிர்த்து 65 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று மாவட்ட தலைமையகத்தை அடைந்தனர். இந்த மாணவிகள், இரவு முழுவதும் இருட்டில் நடந்து, தங்கள் கோரிக்கைகளை உயர் அதிகாரிகளிடம் கொண்டு சேர்க்க முயன்றனர். இவர்களின் துணிச்சலான இந்தப் பயணம், கல்விக்காக அவர்கள் கொண்டிருக்கும் ஆர்வத்தையும், எதிர்கொள்ளும் தடைகளையும் வெளிப்படுத்துகிறது.

இந்த மாணவிகள், நீல நிற பள்ளி சீருடையில், ஞாயிற்றுக்கிழமை இரவு நாங்ன்யோ கிராமத்தில் இருந்து தங்கள் பயணத்தைத் தொடங்கினர். இரவு முழுவதும் நடந்து, மறுநாள் காலை லெம்மி என்ற மாவட்ட தலைமையகத்தை அடைந்தனர். இவர்களின் இந்தப் பயணத்தின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. மாணவிகள், “ஆசிரியர் இல்லாத பள்ளி ஒரு கட்டிடம் மட்டுமே” என்று எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி, புவியியல் மற்றும் அரசியல் அறிவியல் ஆசிரியர்கள் இல்லாததால் தங்கள் கல்வி பாதிக்கப்படுவதாக குற்றம்சாட்டினர்.

மாணவிகள் பலமுறை ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்று கோரியும், அதிகாரிகள் அதைப் புறக்கணித்ததாகக் கூறுகின்றனர். பள்ளி முதல்வர், புவியியல் மற்றும் அரசியல் அறிவியல் ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளதை ஒப்புக்கொண்டாலும், மற்ற பாடங்களுக்கு போதுமான ஆசிரியர்கள் இருப்பதாகக் கூறுகிறார். இந்தத் துணிச்சலான மாணவிகளின் கோரிக்கைகளை நிர்வாகம் இப்போதாவது நிறைவேற்றுமா? என்ற கேள்வி இப்பொது எழுந்துள்ளது.