ஆந்திரா மாநிலம் விஜயவாடாவில், “என் அம்மா எப்போதும் படிக்க தான் சொல்லிக்கிட்டே இருக்காங்க… இது ஒரு பெரிய தொல்லை!” என்று 11 வயது மாணவன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. வழக்கமாக திருட்டு, சாலை விபத்து, வாக்குவாதம் போன்றவற்றை கையாளும் போலீசுக்கு, இம்மாதிரியான புகார் கிடைத்தது முதல் முறை என கூறப்படுகிறது. மாணவனின் புகாரை கேட்டு, சிரிப்பை அடக்க முடியாத அளவுக்கு போலீசார் ரசித்தாலும், அதை சிறுவனின் பார்வையில் மிகுந்த கவனத்துடனும் பொறுப்புடனும் கையாள முடிவு செய்தனர்.
அதன் பிறகு, மாணவனின் தாயை போலீஸ் ஸ்டேஷனுக்கு வர வைத்து விசாரித்ததில், சிறுவனின் தாய் கணவனை பிரிந்து, இரண்டு பிள்ளைகளையும் தனியாக வளர்த்து வருகிறார். கடையில் வேலை செய்து குடும்பத்தை நடத்தும் நிலையில், மூத்த மகனும் வேலை செய்கிறார். இளைய மகனாவது நல்லபடியாக படித்து முன்னேற வேண்டும் என்ற ஆசையில், அவருக்கென செல்போனும் வாங்கிக் கொடுத்துள்ளார். ஆனால், அந்த போனை கல்விக்காக அல்லாது விளையாட்டிற்காகப் பயன்படுத்தும் மகனை கண்டித்ததற்காக போலீஸ் ஸ்டேஷனை நாடியுள்ளார் என்பது தெரிய வந்தது.
இதையடுத்து, காவல் உதவி கமிஷனர் துர்கா ராவ், சிறுவனை தனியாக அழைத்து நேரடியாக உரையாடி, “உன் அம்மா உன்னுடைய எதிர்கால நலனை மட்டுமே நினைத்துதான் படிக்கச் சொல்லுகிறார். நீ நன்றாக படிக்க வேண்டும் என்ற விருப்பத்தில்தான் அவர் நடந்து கொள்கிறார்” என்று பொறுமையாக பேசினார். குழந்தையின் மனதில் பதியும் வகையில் எளிமையாகவும் அன்பாக விளக்கியதால், சிறுவன் மனம் மாறி, நிச்சயமாக நன்றாகப் படிக்கிறேன் என்று வாக்குறுதி அளித்துள்ளார்.
மேலும், தன்னுடைய தவறை உணர்ந்து, தாயிடம் மன்னிப்பும் கேட்டுள்ளார். விஜயவாடாவில் நடந்த இந்த நிகழ்வு சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. போலீசாரின் புத்திசாலியான அணுகுமுறை மற்றும் பாசமிக்க நடத்தை அனைத்துத் தரப்பினராலும் பாராட்டப்படுகின்றது.
