பீகார் மாநிலம் காகரியா மாவட்டத்தில் ஒரு 14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகிய சம்பவம் நடந்துள்ளது. ஒரு இளைஞன், சிறுமியை ஏமாற்றி வீட்டிலிருந்து, கிராமத்திற்கு அருகில் உள்ள அணைக்கு அழைத்துச் சென்றான். அங்கு முன்பே இருந்த சில இளைஞர்கள் சிறுமிக்கு மது கொடுத்து, போதை மாத்திரை கொடுத்து, பின்னர் ஒரு கும்பலாக அவர்கள் அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது.

இந்த சம்பவம் செப்டம்பர் 12 ஆம் தேதி இரவு நடந்ததாக கூறப்படும் நிலையில் சிறுமியின் தாய், காவல் நிலையத்தில் புகார் அளித்து நீதி கேட்டுள்ளார். சிறுமியின் தாய் தனது புகாரில், அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளைஞன் தனது மகளுக்கு இரவில் போன் செய்து, வீட்டு கதவைத் திறக்கச் சொல்லி அழைத்ததாகவும், பின்னர் மகளை மோட்டார் சைக்கிளில் அணைக்கு அழைத்துச் சென்றதாகவும் கூறியுள்ளார். அங்கு மற்ற இளைஞர்கள் சிறுமிக்கு மது கொடுத்து, பின்னர் வன்கொடுமை செய்ததாகவும் தெரிவித்தார்.

புகார் பெற்றவுடன், காவல்துறை வழக்கு பதிவு செய்து, சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பியுள்ளது. குற்றவாளிகளை பிடிக்க காவல்துறை தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது. காகரியா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராகேஷ் குமார் சம்பவ இடத்தை பார்வையிட்டு, குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று உறுதியளித்துள்ளார்.