தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் கடந்த 27ஆம் தேதி நாமக்கல் மற்றும் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது கரூரில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடர்பாக கரூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே, அரசுத் தலைமையில் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த ஆணையம் நேற்று முதல் விசாரணையைத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் எனவும், உயிரிழப்புகள் நிகழ்ந்த இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை பாதுகாக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் எனவும், தமிழக வெற்றிக்கழக (தவெக)த்தின் சார்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞர்கள் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

இதுபற்றி செய்தியாளர்களிடம் தவெக் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்ததாவது: “கரூர் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல், காவல்துறை குளறுபடி மற்றும் திமுகவின் முக்கிய நிர்வாகிகள் சிலரால் ஏற்படுத்தப்பட்ட குழப்பமே இந்த உயிரிழப்புகளுக்கான காரணம். இதுதொடர்பாக மாநில காவல்துறை விசாரணை நடத்த இயலாது என்பதால், சிபிஐ விசாரணை அவசியம் என்பதற்காக நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளோம்.

மேலும், நிகழ்வுக்கு முன்பே முகநூல் போன்ற சமூக வலைதளங்களில் சிலர் ‘பெரிய சம்பவம் நடக்கும்’ என பதிவிட்டுள்ளனர். இது திட்டமிட்ட சூழ்ச்சியைக் காட்டுகிறது. மின் துண்டிப்பு, தேவையில்லாத லத்திசார்ஜ் போன்றவையும் ஏற்பட்டதாகக் குற்றம்சாட்டியுள்ளோம். அதற்கிடையே, ஒரே இரவில் 39 உடல்களுக்கு உடற்கூராய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது வழக்கமான நடைமுறை அல்ல. பொதுவாக சூரியன் அஸ்தமனத்திற்குப் பிறகு, சூரியன் உதிக்கும்வரை உடற்கூராய்வு மேற்கொள்ளக் கூடாது என்பது நடைமுறை. அந்த இரவில் மருத்துவர்கள் யார்? அவர்களுக்கு உரிய தகுதி உள்ளதா? என்ற பல கேள்விகளும் எழுகின்றன. இவை அனைத்தும் எங்கள் மனுவில் விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.” என அவர் தெரிவித்தார்.