பிரிட்டனைச் சேர்ந்த பிரபலமான விளாக்கர் ஒருவருக்கு, இந்திய ரயில் பயணத்தின்போது சில பயணிகளின் அநாகரிகமான நடத்தையால் மோசமான அனுபவம் ஏற்பட்டுள்ளது. ‘பேக்பேக்கர் பென்’ என்ற பெயருடைய அந்த விளாக்கர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. பயணத்தின்போது அடிப்படை நாகரிகம் அற்ற செயல்களைச் சிலர் வெளிப்படுத்தியதாக பென் தனது வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Backpacker Ben (@backpacker.ben)

முதலாவதாக, அவருக்கு முன்னால் அமர்ந்திருந்த ஒரு பயணி, தனது கால்களைப் பென்னின் இருக்கை மீது மீண்டும் மீண்டும் வைத்துள்ளார். இதைப் பற்றி பென் மென்மையாக எடுத்துச் சொல்லியும், அந்த நபர் சிரித்துவிட்டு, இரண்டு நிமிடங்களில் மீண்டும் அதே செயலைத் தொடர்ந்ததுடன், உறுத்துவது போல் பென்னை முறைத்தும் பார்த்துள்ளார். பென்னுக்கு ஏற்பட்ட இரண்டாவது அனுபவம் மேலும் அதிர்ச்சியூட்டுவதாக இருந்தது. அங்குக் கடந்து சென்ற ஒரு பயணி, ஏதோ வெற்றிலையைச் மென்றபடி வந்தவர், கடந்துபோகும்போது பென்னின் கையின் மீது துப்பியுள்ளார்.

“அவர் என்னைப் பார்த்துவிட்டு ஏதோ சொல்லிச் சென்றார். அதிக அளவு எச்சில் என் கையில் விழுந்தது” என்று பென் வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார். இந்தச் சம்பவம் அவரைப் பூரணமாகவே மனச்சோர்வடையச் செய்துள்ளது. இந்த வீடியோ வைரலானவுடன், சமூக வலைதளங்களில் கலவையான எதிர்வினைகள் எழுந்தன. சிலர், “இவ்வளவு பணக்கார நாட்டைச் சேர்ந்தவர்கள், ஏசி பெட்டிகளிலோ அல்லது வந்தே பாரத் போன்ற ரயில்களிலோ பயணிக்காமல் மலிவான வகுப்பைத் தேர்ந்தெடுப்பதே தவறு” என்று பென்னைக் குறை கூறினர்.

வேறு சிலர், இதுபோன்ற செயல்கள் இந்தியாவின் பிம்பத்தைக் கெடுப்பதாகவும், இது கண்டிக்கத்தக்கது என்றும் தெரிவித்தனர். சில நாட்களுக்கு முன்பு ரயில்வே ஊழியர் ஒருவர் குப்பையைக் களையெடுத்து ரயில் தண்டவாளத்தில் வீசியது குறித்து பென் வெளியிட்டிருந்த வீடியோவும் சுத்தம் மற்றும் பொது விழிப்புணர்வு குறித்து விவாதத்தை எழுப்பியிருந்தது.