உத்தரப் பிரதேச மாநிலம் சஹரன்பூரின் கோட்வாலி தேஹாத் பகுதியில் நடந்த கொடூர சம்பவம் சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காரில் பயணித்த இளைஞர்கள் குழு ஒருவர், ஒரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநரை தாக்கி, பின்னர் அவரை தங்களது காரின் பானட்டில் இழுத்துச் சென்ற காட்சிகள் வீடியோவாக பரவியுள்ளன. இந்த சம்பவம் ஷேக்புரா காடிம் காவல் நிலைய எல்லைக்குள் உள்ள நாகல்–தப்ரி சாலையில் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சாலையில் தொடங்கிய சிறிய  வாக்குவாதமே தாக்குதலாக மாறியுள்ளது. காரில் இருந்த இளைஞர்கள் பைக் ஓட்டுநருக்கு வழி விட மறுத்ததுடன், வாக்குவாதத்தின் போது பைக் ஓட்டுநர் அவர்களின் காரை “டின் பாக்ஸ்” என அவமதித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த இளைஞர்கள் கார் நிறுத்தி, அந்த நபரை மோட்டார் சைக்கிளில் இருந்து இழுத்து தரையில் தள்ளி, பலத்த அடி கொடுத்துள்ளனர்.

 

 

தாக்குதலுக்குப் பிறகு இளைஞர்கள் மீண்டும் காரில் ஏறிச் செல்ல முயன்ற போது, பாதிக்கப்பட்டவர் அவர்களைத் தடுக்க வாகனத்தின் முன் நின்றார். ஆனால் ஓட்டுநர் நிற்கவில்லை. கார் திடீரென வேகமெடுக்க, அந்த நபர் பானட்டில் விழுந்து கிட்டத்தட்ட 500 மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டார். வீடியோவில் அவர் பானட்டில் ஒட்டிக்கொண்டு உதவி கேட்டு கெஞ்சுவது  தெளிவாகக் காணலாம்.

சிறிது தூரம் சென்ற பிறகு, ஓட்டுநர் திடீரென பிரேக் போட்டதால், அந்த நபர் சாலையில் விழுந்துவிட்டார். பின்னர் தாக்குதல் நடத்திய இளைஞர்கள் கார் ஓட்டி தப்பிச் சென்றனர். உயிர் தப்பியிருந்தாலும், அந்த நபர் பலத்த காயங்களால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, சஹரன்பூர் காவல்துறை சம்பவம் குறித்து விசாரணை ஆரம்பித்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்களை பிடிக்க தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடியோ காட்சிகளையும் பிற ஆதாரங்களையும் அடிப்படையாகக் கொண்டு, தாக்குதல், கொலை முயற்சி உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை கூறியுள்ளது. மேலும் “சாலையில் இவ்வகை வன்முறை சம்பவங்கள் சட்ட ஒழுங்குக்கு பெரிய அச்சுறுத்தல். குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,” என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.