தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. குறிப்பாக, திமுக கூட்டணியில் உள்ள மதிமுக, இம்முறை 12 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என பிடிவாதம் காட்டி வருவது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த தேர்தலில் வெறும் 6 இடங்களில் போட்டியிட்ட மதிமுக, இந்த முறை இரட்டிப்பு இடங்களைக் கேட்பதற்குப் பின்னால் ஒரு முக்கிய காரணம் இருக்கிறது. வைகோவின் மாநிலங்களவை உறுப்பினர் பதவி முடிவுக்கு வந்தபோது, அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்காமல் அந்த இடத்தை கமல்ஹாசனுக்கு திமுக ஒதுக்கியது மதிமுகவினரிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதன் காரணமாகவே, இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க “அதிக இடங்கள் அல்லது ராஜ்யசபா சீட்” என்ற புதிய நிபந்தனையை அவர்கள் முன்வைக்கின்றனர்.
வெறுமனே வாய்மொழியாக இடங்களைக் கேட்காமல், துரை வைகோ நடத்திய ரகசிய சர்வேயின் அடிப்படையில் வெற்றி வாய்ப்புள்ள 12 தொகுதிகளை மதிமுக பட்டியலிட்டுள்ளது. வாசுதேவநல்லூர், மதுரை தெற்கு, திருநெல்வேலி, திருச்சி கிழக்கு உள்ளிட்ட 12 இடங்களை திமுகவிடம் கேட்டுப் பெற அவர்கள் தீவிரமாக காய்களை நகர்த்தி வருகின்றனர்.
வைகோ “ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்க மாட்டோம்” என்று ஏற்கனவே அறிவித்திருந்தாலும், கட்சியின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தொகுதிகளைப் பெறுவதில் உறுதியாக உள்ளனர். திமுக இந்த ‘செக்’கை எப்படி கையாளப் போகிறது என்பதும், தொகுதிப் பங்கீட்டில் மதிமுகவுக்கு உரிய இடங்கள் கிடைக்குமா என்பதும் தான் தற்போதைய தமிழக அரசியலின் ஹாட் டாபிக்.
