சென்னையில் நடைபெற்ற இண்டியா டுடே கருத்தரங்கில் பங்கேற்ற அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி 210 இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றி பெறும் என்று நம்பிக்கையோடு தெரிவித்தார்.
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும், என்.டி.ஏ கூட்டணியில் ஆட்சியில் பங்கு கோரும் சிக்கல்கள் எதுவும் இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார். திமுக கூட்டணியில்தான் இது போன்ற குழப்பங்கள் நிலவுவதாக விமர்சித்த அவர், எந்தவொரு புதிய சக்தியாலும் அதிமுகவின் வாக்கு வங்கியைச் சிதைக்க முடியாது என்று உறுதியாகக் கூறினார்.
தமிழக அரசியலில் நடிகர் விஜய்யின் வருகை குறித்துப் பேசிய அவர், சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருப்பவர்கள் அரசியலில் உடனே ஜொலிக்க முடியாது என்று குறிப்பிட்டார். களத்தில் இறங்கித் தேர்தலைச் சந்தித்து மக்கள் வாக்குகளைப் பெற்றால் மட்டுமே ஒரு கட்சியின் உண்மையான செல்வாக்குத் தெரியும் என்றும், கூட்டத்தை வைத்து எதையும் கணித்துவிட முடியாது என்றும் கூறினார்.
துணிச்சலுடன் மக்களோடு இணைந்து செயல்படுபவர்களே சிறந்த தலைவராக இருக்க முடியும் எனக் குறிப்பிட்ட எடப்பாடி பழனிசாமி, எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் பெயரைக் குறிப்பிடாமல் தமிழகத்தில் யாரும் அரசியல் செய்ய முடியாது என்று தெரிவித்தார்.
