சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.பி.க்கள் தமிழச்சி தங்கப்பாண்டியன் மற்றும் கனிமொழி சோமு ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய தமிழச்சி தங்கப்பாண்டியன், தேர்தல் களத்தில் ஒரு பெண்ணைப் பற்றி அவதூறாகப் பேசினாலும், அது ஒட்டுமொத்தப் பெண்களையும் இழிவுபடுத்துவதற்குச் சமம் என்று கூறினார்.

கனிமொழி எம்.பி குறித்த அவதூறு பேச்சுகளுக்காக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரித்தார். மேலும், தேர்தலில் அதிமுக இரண்டாம் இடத்திலிருந்து மூன்றாம் இடத்திற்குச் சென்றுவிடுமோ என்ற உச்சக்கட்ட பதற்றத்தில் எடப்பாடி பழனிசாமி இருப்பதாக அவர் விமர்சித்தார்.

தோல்வி பயத்தின் காரணமாகவே ஒரு முன்னாள் முதலமைச்சர் என்பதை மறந்து, தரம் குறைந்த பேச்சாளர் போல அவர் பேசி வருகிறார் என்றும் தமிழச்சி தங்கப்பாண்டியன் தனது பேட்டியில் சாடினார்.