குமரி மாவட்டம் குளச்சல் லியோன்நகரை சேர்ந்த மீன்பிடித் தொழிலாளி ஆரோக்கிய ஜெனோ (வயது 32), தனது மனைவி டயானாவுடன் குடும்பமாக வாழ்ந்து வருகிறார்.
இவர்களுக்கு மூன்றரை வயது மகனும், ஒன்றரை வயது பெண் குழந்தையான ரியானாவும் இருந்தனர். நேற்று ஜெனோ வழக்கம்போல வேலைக்கு சென்றிருந்த நிலையில், டயானா வீட்டில் இரு குழந்தைகளுடன் இருந்தார். மாலையில் சமையல் பணியில் இருந்தபோது, அவரது இரு குழந்தைகளும் வீட்டின் முன்பக்கத்தில் மகிழ்ச்சியுடன் விளையாடிக் கொண்டிருந்தனர்.
சில நேரத்துக்குப் பிறகு குழந்தைகள் சத்தம் கேட்காததாலும், அவர்கள் வீட்டுக்குள் வராததாலும் சந்தேகமடைந்த டயானா வெளியே சென்று பார்த்தபோது, 1½ வயது ரியானா குழந்தை, வீட்டின் முன்புறம் வைக்கப்பட்டிருந்த தண்ணீர் வாளிக்குள் தலைகீழாக விழுந்து அசைவின்றி கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
அருகில், மூன்றரை வயது மகன் தனியாக விளையாடிக் கொண்டிருந்தான். பதற்றத்தில் உள்ள டயானா உடனே குழந்தையை மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இந்த துயரச் செய்தியைக் கேட்டதும், டயானா இயலாமல் கதறி அழுதார். பெற்றோரின் சிறிது கவனக்குறைவால் ஏற்பட்ட இந்த துயர சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பெரும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக குளச்சல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
