வேலூர் மாவட்டம் விருபாட்சிபுரம் காந்தி நகரைச் சேர்ந்த ரமேஷ் சைதாப்பேட்டையில் சலூன் கடை நடத்தி வருகிறார்.

அவரது மகன் சஞ்சய் (13) என்பது வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி. அரசு பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்த சஞ்சய், விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு அருகம்புல் பறிக்க விருப்பாட்சிபுரம் பூந்தோட்டம் பகுதியில் சென்றுள்ளார். அப்போது புதரில் பதுங்கியிருந்த விஷப்பூச்சி ஒன்று சஞ்சயை கடித்ததாக கூறப்படுகிறது. உடனடியாக தனது தந்தைக்கு வீடியோ அழைப்பு செய்த சஞ்சய், சைகைகள் மூலமாக நிலையை தெரிவித்தார்.

உடனே குடும்பத்தினர் அங்கு விரைந்து சென்று சஞ்சயை மீட்டு, வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சஞ்சய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தகவலறிந்த பாகாயம் போலீசார் உடனடியாக நேரில் வந்து சஞ்சயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் சம்பந்தப்பட்ட பகுதியில் மிகுந்த சோகத்தையும், பெரும் ஆழ்துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.