இந்தியாவில் நிகழும் சாலை விபத்துகளில் பெரும்பாலானவை சிக்கலான சூழல்களால் அல்லாமல், மிக அடிப்படையான சாலை விழிப்புணர்வு இல்லாததாலேயே ஏற்படுகின்றன என்பதை மெய்ப்பிக்கும் வகையில் ஒரு காணொளி எக்ஸ் (X) தளத்தில் வைரலாகி வருகிறது. அந்தக் காணொளியில், வளைவான ஒரு சாலையில் வரையப்பட்டுள்ள நீண்ட திண்ணமான வெள்ளைக் கோட்டை (Solid White Line) மதிக்காமல், இருசக்கர வாகனத்தில் வந்த நபர் முன்னால் சென்ற பேருந்தை முந்த முயன்றுள்ளார். அந்த அபாயகரமான வளைவில் நிலைதடுமாறிய அவர், திடீரென கீழே விழுந்து விபத்துக்குள்ளானார்.



அந்தத் தருணத்தில், எதிர்புறம் காரில் வந்த ஓட்டுநர், கீழே விழுந்த நபர் மீது மோதிவிடக் கூடாது என்ற மனிதாபிமானத்துடன் உடனடியாகக் காரைத் திருப்பியுள்ளார். பைக் ஓட்டுநரின் உயிரைக் காப்பாற்ற முயன்ற போது, அந்தக் கார் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த சுவரில் பலமாக மோதியது. தப்பு செய்த நபரைக் காப்பாற்றப்போய், எந்தத் தவறும் செய்யாத கார் ஓட்டுநர் விபத்தில் சிக்கிய இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாலை விதிகளை மீறுவது என்பது உங்களை மட்டுமல்லாமல், உங்களைக் காப்பாற்ற நினைப்பவர்களையும் விபத்தில் தள்ளும் என்பதற்கு இந்த வீடியோ ஒரு கசப்பான சான்றாக அமைந்துள்ளது.