திருவள்ளூர் மாவட்டம் புல்லரம்பாக்கம் கிராமத்தில், கோடை வெப்பத்தைத் தாங்க முடியாமல் ஏசி குளிர்சாதன வசதி வாங்கித் தருமாறு கேட்ட மனைவியின் கோரிக்கையை கணவர் நிராகரித்ததால், மனமுடைந்த இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்ட மோனிகா மற்றும் ஆகாஷ் தம்பதியினரிடையே, நிலவி வரும் கடும் வெப்பம் காரணமாக ஏசி வாங்குவது தொடர்பாக அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்பட்டு வந்துள்ளன. இந்நிலையில், சனிக்கிழமை இரவு குடும்பத்தினர் அனைவரும் மொட்டை மாடியில் உறங்கச் சென்ற நிலையில், அறையில் தனியாக இருந்த மோனிகா விரக்தியில் விபரீத முடிவை எடுத்துள்ளார்.

மறுநாள் காலை மோனிகா உயிரிழந்த நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த திருவள்ளூர் போலீசார், மோனிகாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனால் தற்கொலை கடிதம் எதுவும் கிடைக்காத நிலையில், இது குறித்து இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே, மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாக மோனிகாவின் பெற்றோர் புகார் அளித்துள்ளதால், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.