தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அதிமுகவின் இரு அணிகள் இணைப்பு, கடைசி நேரத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பு விதித்த அதிரடி நிபந்தனையால் இன்று மாலை திடீர் பின்னடைவைச் சந்தித்துள்ளது.

முன்னதாக, அதிமுகவின் இரு பிரிவுகளும் இன்று மாலை 4 மணியளவில் ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஒன்றாக இணையப் போவதாகவும், இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருந்ததாகவும் கூறப்பட்டது. ஆனால், இறுதி கட்டப் பேச்சுவார்த்தையின் போது, எஸ்பி.வேலுமணி அணியைச் சேர்ந்த அனைவரும் எடப்பாடி பழனிசாமி தலைமையிடம் அதிகாரப்பூர்வமாக ‘மன்னிப்புக் கடிதம்’ அளிக்க வேண்டும் என்ற கறாரான நிபந்தனையை இபிஎஸ் தரப்பு திடீரென முன்வைத்ததாகத் தகவல்கள் கசிந்துள்ளன.

இதற்குச் சற்றும் எதிர்பாராத வேலுமணி தரப்பினர், தங்களால் எக்காரணம் கொண்டும் மன்னிப்புக் கடிதம் எல்லாம் எழுதித் தர முடியாது என்று கறாராகக் கூறிவிட்டு, அங்கிருந்து பாதியிலேயே கோபத்துடன் திரும்பிச் சென்றுள்ளனர். அணிகள் இணைப்பில் ஏற்பட்டுள்ள இந்த அதிரடி முட்டுக்கட்டை, அதிமுக தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்போதைய ஹாட் டாபிக்காகவும் மாறியுள்ளது.