ஈரோடு மாநகராட்சியில் மொத்தம் உள்ள 60 வார்டு கவுன்சிலர்களில் திமுக சார்பில் 48 பேரும், அதிமுக சார்பில் 6 பேரும், காங்கிரஸ் சார்பில் 4 பேரும் மற்றும் கொமதேக, மதிமுக ஆகிய கட்சிகளைச் சேர்ந்தவர்களும் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களில் அதிமுக-வைச் சேர்ந்த கவுன்சிலர்கள் ஜெகதீஷ், தங்கவேலு, ஹேமலதா மற்றும் திமுக-வைச் சேர்ந்த 43-ஆவது வார்டு கவுன்சிலர் சபுராமா ஆகியோர் அண்மையில் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்து, அக்கட்சிக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருகின்றனர்.
இத்தகைய அரசியல் மாற்றங்களுக்கு மத்தியில், ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் இன்று மாமன்றக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்ததால், இன்றைய கூட்டம் அரசியல் வட்டாரத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
இன்று காலை 11:30 மணியளவில் மாமன்றக் கூட்டம் தொடங்கியதும், தவெக-வில் இணைந்த கவுன்சிலர்களான ஜெகதீஷ், தங்கவேலு, ஹேமலதா மற்றும் சபுராமா ஆகியோர் திடீரென மாநகராட்சி கமிஷனர் அலுவலகத்திற்குச் சென்று, “நாங்கள் இன்று முதல் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் அதிகாரப்பூர்வமாகச் செயல்படுவோம்” என்று கமிஷனரை நேரில் சந்தித்துக் கடிதம் கொடுத்தனர்.
அதனைத் தொடர்ந்து, கமிஷனர் அலுவலகம் மற்றும் மாநகராட்சி கூட்டரங்கில் முதலமைச்சர் விஜய்யின் புகைப்படங்களை அவர்கள் அடுத்தடுத்து வைத்தனர். மேலும், ஈரோடு மாநகராட்சி மேயர் அறையிலும் முதலமைச்சர் விஜய்யின் புகைப்படத்தை வைப்பதற்காக அந்த 4 தவெக கவுன்சிலர்களும் சென்றதால், மாநகராட்சி அலுவலக வளாகத்தில் திமுக- தவெக இடையே சற்று பரபரப்பான சூழல் நிலவியது.
