திருமணமான பெண்ணைத் தனது கணவர் வீட்டில் சமைக்க விடாமல் தடுப்பதும், அவரைச் சமையலறைக்குள் நுழைய விடாமல் தடுப்பதும் அந்தப் பெண்ணிற்கு இழைக்கப்படும் கடுமையான மன ரீதியான சித்திரவதை என்று மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை அதிரடித் தீர்ப்பு வழங்கியுள்ளது. 2022-ல் திருமணமான ஒரு பெண், தனது கணவர் மற்றும் மாமியார் மீது தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், பெண்ணின் அடிப்படை உரிமைகளைப் பறிப்பது சட்டப்படி குற்றம் என்று சுட்டிக்காட்டியுள்ளது.

​அந்தப் பெண் அளித்த புகாரில், “நான் வீட்டில் ஒரு வேலைக்காரி போல நடத்தப்பட்டேன்; சமையலறைக்குள் நுழையக் கூட எனக்கு அனுமதி இல்லை, வெளியில் இருந்துதான் உணவு வாங்கி வரச் சொல்லி வற்புறுத்தினார்கள்” என்று தனது குமுறலைத் தெரிவித்திருந்தார்.

இதை விசாரித்த நீதிபதி ஊர்மிளா ஜோஷி-பால்கே, ஒரு பெண்ணை அவரது வீட்டில் அடிப்படைத் தேவைகளுக்காகவும், நடமாட்டத்திற்காகவும் அலைக்கழிப்பது மன ரீதியான கொடுமையே என்று கூறி, கணவர் மீதான வழக்கைத் தள்ளுபடி செய்ய மறுத்துவிட்டார். அதே சமயம், மாமியார் மீதான புகார்கள் வலுவாக இல்லாததால் அவர் மீதான குற்றச்சாட்டுகள் மட்டும் நீக்கப்பட்டுள்ளன.