பீகார் மாநிலம் பபுவா நகரில் உள்ள ஒரு உணவகத்தில் உணவு வாங்கிச் சாப்பிட்ட 20 வயது வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். சாரங்பூர் பகுதியைச் சேர்ந்த விஷால் குமார் திவாரி என்ற அந்த வாலிபர், தனது தம்பி மற்றும் நண்பருடன் சேர்ந்து ஹோட்டலில் இருந்து வாங்கி வரப்பட்ட மஞ்சூரியன் மற்றும் பனீர் உணவுகளை இரவு சாப்பிட்டுள்ளார்.

சாப்பிட்ட சில மணி நேரங்களிலேயே மூவருக்கும் கடுமையான வாந்தி ஏற்பட்டு உடல்நிலை மோசமடைந்தது. அதிகாலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், விஷால் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மற்ற இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தச் சம்பவத்தால் ஆத்திரமடைந்த உறவினர்கள், அரசு மருத்துவமனை மருத்துவர்கள் விஷாலை முறையாகப் பரிசோதிக்காமல் அலட்சியமாக இருந்ததாகக் குற்றம் சாட்டியுள்ளனர். வரும் ஏப்ரல் 20-ம் தேதி விஷாலுக்கு வீட்டில் ஒரு விசேஷம் நடக்கவிருந்த நிலையில், இந்தத் துயரச் சம்பவம் அந்தப் குடும்பத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

புகாரின் பேரில் விரைந்து வந்த அதிகாரிகள் அந்த உணவகத்திற்குச் சீல் வைத்தனர். உணவின் தரம் குறித்து ஆய்வு செய்ய மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகே விஷால் விஷ உணவால் இறந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது உறுதியாகத் தெரியும்.