குஜராத்தின் தலைநகர் காந்திநகரில் உள்ள சிவில் மருத்துவமனையில் குழந்தை மருத்துவராக பணியாற்றி வந்த 39 வயதான டாக்டர் நீரவ் பிரம்மபட், தனது 6 வயது மகள் த்விஜாவுடன் ஞாயிற்றுக்கிழமை அதலாஜ் பாலத்திற்கு சென்றிருந்தார். த்விஜா, கௌரி விரதம் மேற்கொண்டிருந்தார். விரதம் முடிந்ததையொட்டி, அதன் நினைவாக ஜுவாராக்களை நதியில் மிதக்கவிடும் மரபின்படி, தந்தை மகளுக்காக நர்மதா கால்வாயில் இறங்கினார். ஆனால், திடீரென அவரது கால்கள் வழுக்கி, ஆழமான நீரில் விழுந்தார். மீண்டும் மேலே வர முடியாமல், மகளின் கண்முன்னே அவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

தந்தை மூழ்கும் காட்சியை பார்த்த த்விஜா அழ ஆரம்பித்தார். அந்த நேரத்தில் அருகே இருந்த ஒரு ஆட்டோ ஓட்டுநர் குழந்தையின் கதறலைக் கேட்டுக் கொண்டே அருகில் சென்று விசாரித்தார். சிறுமி குஜராத்தி மொழியில் தந்தை நீரில் விழுந்ததை கூறினார். இதைக் கேட்ட ஆட்டோ ஓட்டுநர் மற்றும் பிற வழிப்போக்கர்கள் கூடவே சென்றபோது, சம்பவம் வெளியாகி, போலீசாரும் மீட்புப்படையினரும் வரவழைக்கப்பட்டனர். தீவிரத் தேடுதல் வேட்டைக்கு பிறகு நீரில் இருந்து மருத்துவர் நீரவ் பிரம்மபட்டின் உடல் மீட்கப்பட்டது. தந்தையை இழந்த த்விஜாவை பார்த்த அனைவரும் கண்கள் கலங்கினர்.

இந்த துயர நிகழ்வால், காந்திநகர் முழுவதும் சோக நிலை ஏற்பட்டுள்ளது. அர்ப்பணிப்புடன் பணியாற்றிய சிறுவர் நல மருத்துவர் ஆன டாக்டர் நீரவ் பிரம்மபட்டின் அகால மரணம், அவரது மருத்துவமனை சக ஊழியர்கள் மற்றும் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மனைவியும் அதே மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். தந்தையின் உயிர் தியாகம் மகளின் ஒரு சிறு விருப்பத்திற்காக நடந்தது என்ற உண்மை, சமூக வலைதளங்களிலும் பரவலாக பகிரப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. ஒரு சிறுமியின் கண்முன் நடந்த சோக நிகழ்வு, அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.