இந்தியாவின் பெருநிறுவனங்களில் பணிபுரியும் லட்சக்கணக்கான பெண் ஊழியர்களின் ஆரோக்கியம் மற்றும் வேலைவாய்ப்பு குறித்த ஒரு அதிர்ச்சிகரமான உண்மை வெளியாகியுள்ளது. ‘கோஸ்ட் ஆஃப் சைலன்ஸ்’ என்ற சமீபத்திய ஆய்வின்படி, கருச்சிதைவு போன்ற உடல்நலப் பாதிப்புகள் காரணமாக சுமார் 7 கோடிக்கும் அதிகமான பெண்கள் தங்கள் வேலையைத் துறக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
அலுவலகத்தில் இது குறித்துப் பேசினால் வேலை போய்விடுமோ என்ற அச்சம் அல்லது சக ஊழியர்களின் விமர்சனங்களுக்கு உள்ளாவோமோ என்ற தயக்கம் காரணமாக, சுமார் 8 கோடி பெண்கள் இந்த வலியையும் மன உளைச்சலையும் மௌனமாகச் சுமந்து கொண்டிருக்கின்றனர்.
இந்தச் சூழலை மாற்ற, ‘பிரேக் த சைலன்ஸ்’ என்ற தேசிய அளவிலான விழிப்புணர்வு இயக்கத்தை குவெஸ்ட் குளோபல் நிறுவனம் தொடங்கியுள்ளது. இது வெறும் உடல்நலப் பிரச்சினை மட்டுமல்ல, பெண்களின் உற்பத்தித் திறனைப் பாதிக்கும் ஒரு கார்ப்பரேட் நெருக்கடி என்பதை உணர்ந்து, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 24 மணிநேர மனநல ஆலோசனை மற்றும் ஆதரவை இந்த அமைப்பு வழங்கி வருகிறது.
இந்த முன்னெடுப்பில் பாரத் சீரம், கோனே, அமரா ராஜா போன்ற முன்னணி நிறுவனங்களும் இணைந்துள்ளன. நிறுவனங்கள் பெண் ஊழியர்களுக்குப் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்திக் கொடுக்கும்போது, அவர்களால் மன அழுத்தமின்றித் தங்கள் கருத்துகளை வெளிப்படையாகப் பகிர்ந்து கொண்டு, ஆரோக்கியமான பணியிட கலாச்சாரத்தை உருவாக்க முடியும் என்பது இந்த ஆய்வின் முக்கியச் செய்தியாகும்.
