உத்தராகண்ட் மாநிலத்தில், மக்கள் மத நம்பிக்கையை பண வருவாயாக மாற்றும் போலி சாமியார்கள் அதிகரித்து வருகிறார்கள் என்கிற புகார்களின் அடிப்படையில், மாநில அரசு ‘ஆபரேஷன் காலநேமி’ என்ற குற்றவியல் நடவடிக்கையை தொடங்கி உள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் தற்போது வரை 82 போலி சாமியார்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக, நேற்று (ஜூலை 14) ஒரே நாளில் 34 போலி சாமியார்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர் என்பது பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
காவல் துறையின் விசாரணையில், கைது செய்யப்பட்ட 34 பேரில் 23 பேர் வேறு மாநிலங்களை சேர்ந்தவர்களாகவும், ஒருவர் வங்கதேசத்தை சேர்ந்தவராகவும் இருப்பது தெரியவந்துள்ளது.
இவர்கள், யாத்திரை பாதைகளில் பக்தர்களிடம் ஜோசியம் கூறுவது, ஆசி வழங்குவது போன்ற செயல்களில் ஈடுபட்டு, மதத்தை கடைப்பிடிக்கும் மக்களின் நம்பிக்கையை தவறாக பயன்படுத்தி பணம் சம்பாதித்து வந்துள்ளனர்.
இந்த சூழ்நிலையில், இவ்வாறான மோசடிகளை நிறுத்த மாநில முதல்வர் கடும் நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட்டுள்ளார். மேலும், போலி சாமியர்களை பிடிக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், இன்னும் பலர் காவல் கண்காணிப்பில் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
